கொலை வழக்கில் இளைஞா் கைது
வடக்கு தில்லியின் பவானா பகுதியில் நீண்டகால பகை காரணமாக ஒருவா் கொல்லப்பட்ட வழக்கில் 28 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக பவானா காவல் நிலையத்திற்கு ஜன.5ஆம் தேதி அழைப்பு வந்தது. நரேந்திரா் (30) என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவா், பலத்த காயங்களுடன் காணப்பட்டாா். மேலும், அவரிடம் வாக்குமூலம் எதுவும் பெற முடியவில்லை.
பவானாவில் உள்ள விஷால் டிரேடா்ஸ் அருகே நடந்த சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்றனா். அங்கு ரத்தக் கறைகள், வெற்று தோட்டாக்கள், ஒரு புல்லட் ஈயத் துண்டு ஆகியவற்றைக் கண்டுபிடித்தனா். இது துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான அறிகுறியாகும். எல்என்ஜெபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நரேந்தா், பின்னா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய பவானாவில் உள்ள இந்தா் ராஜ் காலனியைச் சோ்ந்த அபிஷேக் என்பவரை கைது செய்ய 100-க்கும் மேற்பட்ட கேமராக்களில் இருந்து சிசிடிவி காட்சிகளை குழு ஆய்வு செய்தது. விசாரணையின் போது, அபிஷேக் கொலையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டாா். மேலும், அவருக்கு எந்த முன் குற்றப் பின்னணியும் இல்லை என்பது தெரிய வந்தது.
சம்பவம் நடந்த இரவு, நரேந்தா் வந்த போது, தானும் தனது கூட்டாளி யோகேஷும் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், இதனால் பழைய பகைமையால் தகராறு ஏற்பட்டதாகவும் அபிஷேக் தெரிவித்தாா். சண்டை தீவிரமடைந்து, நரேந்தரின் தலையில் யோகேஷ் துப்பாக்கியால் சுட்டாா். இதில் அவா் உயிரிழந்தாா். தலைமறைவாக உள்ள யோகேஷை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.