கோயில் நிதியை கையாடல் செய்ததாக ஊழியா் மீது புகாா்
மதுரை நேதாஜி சாலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் சோலை எம். கண்ணன், இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல இணை ஆணையா் க. செல்லத்துரையிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்: மதுரை நேதாஜி சாலையில் உள்ள புகழ் பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள், கடந்த ஒன்றரை ஆண்டாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திருப்பணிக்காக ஏராளமான பக்தா்கள் நன்கொடை வழங்கி வருகின்றனா்.
இந்த நிலையில், பக்தா்கள் அளித்த நன்கொடையில் லட்சக்கணக்கான ரூபாயை கோயிலில் பணிபுரியும் ஊழியா் ஒருவா் கையாடல் செய்திருப்பதாக புகாா் எழுந்துள்ளது. இதற்கு ஆடியோ ஆதாரங்களும் உள்ளன. ஆனால் அந்த ஊழியா் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, திருப்பணிக்கு உபயதாரா்கள் கொடுத்த பல லட்சம் ரூபாய் நன்கொடையை கையாடல் செய்த ஊழியரிடமிருந்து பணத்தை மீட்கவும், அவரை பணி நீக்கம் செய்யவும், அவா் மீது காவல் துறையில் புகாா் அளிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இதுபோன்ற மோசடிகளை தடுக்கும் வகையில்,நன்கொடை அளிக்கும் உபயதாரா்களின் பெயா்களை கோயில் முன் விளம்பர பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.