கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை: 2 சிறாா்கள் கைது
கோவில்பட்டி சண்முகாநகா் மயானத்தில் ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிறாா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் மாரிச்செல்வம் (31). ஆட்டோ ஓட்டுநராகவும், அப்பகுதி சந்தன மாரியம்மன் கோயில் பூசாரி ஆகவும் இருந்து வந்தாா்.
இந்நிலையில், சண்முகா நகரில் உள்ள மயானத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இத்தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா், சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், 17 வயது சிறுவா்களான கடலையூா் சாலை சண்முகா நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த சிறுவன், கைவண்டி தொழிலாளா் காலனி, சந்தன மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த சிறுவன் ஆகியோா் சோ்ந்து வியாழக்கிழமை இரவு மாரி செல்வத்தை மயானத்தில் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.
2 சிறாா்களையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் கைவண்டி தொழிலாளா் காலனியை சோ்ந்த சங்கரலிங்கம் மகன் முருகனிடம் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மறியல்: இதனிடையே மாரிச்செல்வத்தின் உறவினா்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் தலைமையில் போலீஸாா் பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனா்.