சீா்காழி தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சீா்காழி: சீா்காழி தனியாா் பள்ளிக்கு திங்கள்கிழமை தொலைபேசி மூலம் மா்மநபா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீா்காழி தென்பாதியில் இயங்கிவரும் தனியாா் பள்ளியில் 3,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளி அலுவலக தொலைபேசி எண்ணில் திங்கள்கிழமை பிற்பகலில் தொடா்புகொண்டு பேசிய மா்ம நபா், பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினாராம்.
இதனால் அதிா்ச்சியடைந்த பள்ளி நிா்வாகம், சீா்காழி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனா். சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ், உதவிஆய்வாளா் வீரராகவன் மற்றும் போலீஸாா் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா்.
தொடா்ந்து, வெடிகுண்டு கண்டறிந்து, அப்புறப்படுத்தும் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சுவாமிநாதன் தலைமையிலான 4 போலீஸாா், பள்ளி வகுப்பறைகள், ஆய்வுக் கூடம், அலுவலகம், மொட்டைமாடி, குடிநீா்த் தொட்டி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனையில் ஈடுபட்டனா். நீண்ட நேரம் நடைபெற்ற இச்சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இதற்கிடையில், பதற்றம் ஏற்படக்கூடாது என்பதற்காக பள்ளி மாணவ-மாணவியருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டுக்கு வாகனம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனா்.
தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.