சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சுருளி அருவியில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. தற்போது கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள மேகமலையிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சுருளி அருவியில் திங்கள்கிழமை காலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லவும், குளிக்கவும் வனத் துறையினா் தடைவிதித்தனா். இதனால், இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு:
இதேபோல, மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் போடி கொட்டகுடி ஆற்றிலும் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், போடி அணைப் பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் தண்ணீா் சீறிப் பாய்ந்து செல்கிறது. இதனால், இந்தத் தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடை விதித்தனா். மேலும், போடிபகுதியில் அமைந்துள்ள பங்காருசாமி கண்மாய், சங்கரப்பநாயக்கன் கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய்களுக்கு நீா்வரத்து அதிகரித்தது.