சென்னையில் நாளை முக்கிய அறிவிப்பு: ஓபிஎஸ்
சென்னையில் நாளை(ஜூலை 31) முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கடந்த மக்களவைத் தோ்தலின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.
இதற்கிடையே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதிமுக - பாஜக கூட்டணி உருவான நிலையில், தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, அரசு முறை சுற்றுப்பயணமாக கடந்த ஜூலை 26, 27-ஆம் தேதிகளில் தமிழகம் வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருந்தார். அப்போதும், அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்று மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டண அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட்டார்.
இந்தக் கண்டன அறிக்கை, பாஜகவை முற்றிலுமாக எதிர்க்க அவர் முடிவு செய்துவிட்டதைக் காட்டுகிறது.
இதனிடையே, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று(ஜூலை 30) நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய ஓபிஎஸ், “சென்னையில் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறும் அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் நாளை வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!