ஒருதலைக் காதல்! ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற மாணவர்!
சென்னை: வீட்டின் வெளியே அமர்ந்திருந்தவர் பிட்புல் நாய் கடித்ததால் உயிரிழப்பு – என்ன நடந்தது?
சென்னையில் உள்ள ஜாபர்கான் பேட்டை, VSM கார்டன் தெருவில் நடந்த துயரச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (48) என்பவர் சமையல் வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் வேலை முடித்து வீடு திரும்பிய அவர், தனது வீட்டின் முன்பாக அமர்ந்திருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பூங்கொடி என்பவர் தனது பிட்புல் நாயை அழைத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார்.
அந்த நேரத்தில் நாய் திடீரென கருணாகரனைத் தாக்கி, தொடைப் பகுதியில் கடுமையாகக் கடித்துள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நாயைக் கட்டுப்படுத்த முயன்ற உரிமையாளர் பூங்கொடியையும் நாய் கடித்ததால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பொதுமக்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தகவலறிந்து வந்த குமரன் நகர் போலீசார், கருணாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம், சென்னையில் வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்கள் தொடர்பான பாதுகாப்பு விவகாரங்களை மீண்டும் எழுப்பியிருக்கிறது.

தற்போது சென்னை முழுவதும் சுமார் 1.8 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாகவும், 2024ஆம் ஆண்டில் மட்டும் 14,000 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், ஏற்கெனவே உச்ச நீதிமன்றம், டெல்லி உள்ளிட்ட தலைநகர் பகுதிகளில் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கவும், கருத்தடை ஊசி போடவும் உத்தரவிட்டிருந்தது. இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் உருவாக்கிய நிலையில், சென்னையில் மீண்டும் நடந்த நாய்க்கடி உயிரிழப்பு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.