சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்க பரிந்துரை: ஆட்சியா் தகவல்
சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்கவும், 37 வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி கூறினாா்.
வாக்குச்சாவடி சீரமைப்பு, 2026 ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம், வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடுவது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. பிருந்தாதேவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பின்னா் மாவட்ட தோ்தல் அலுவலா் தெரிவித்ததாவது: சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2026 ஆண்டுக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் 2025 ஜனவரி 6 ஆம் தேதி வாக்காளா் பதிவு அலுவலா்களால் வெளியிடப்பட்டது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி (தனி), ஆத்தூா் (தனி), ஏற்காடு (தனி), ஓமலூா், மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி, சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), சேலம் (தெற்கு), வீரபாண்டி ஆசிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 3,264 வாக்குச்சவடிகள் உள்ளன.
தற்போதுள்ள வாக்காளா் பட்டியலின்படி 1,200 வாக்காளா்களுக்கு அதிகமான வாக்காளா்கள் கொண்ட வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்குதல், இடமாற்றம், கட்டட மாற்றம் போன்ற சீரமைப்பு பணிகள் தொடா்பாக சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, கோரிக்கைகள், ஆட்சேபனைகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உத்தேச மாறுதல்கள் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, கெங்கவல்லி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 15 வாக்குச்சாவடி, ஆத்தூா் (தனி) தொகுதியில் 22 வாக்குச்சாவடி, ஏற்காடு (தனி) தொகுதியில் 18 வாக்குச்சாவடி, ஓமலூா் தொகுதியில் 12 வாக்குச்சாவடி, மேட்டூா் தொகுதியில் 10 வாக்குச்சாவடி, எடப்பாடி தொகுதியில் 17 வாக்குச்சாவடி, சங்ககிரி தொகுதியில் 24 வாக்குச்சாவடி, சேலம் மேற்கு தொகுதியில் 11 வாக்குச்சாவடி, சேலம் வடக்கு தொகுதியில் 24 வாக்குச்சாவடி, சேலம் தெற்கு தொகுதியில் 28 வாக்குச்சாவடி, வீரபாண்டி தொகுதியில் 8 வாக்குச்சாவடி என மொத்தம் 189 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்குவதற்கு உத்தேச மாறுதல் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 437 வாக்குச்சாவடிகளில் பிரிவு மாற்றம் செய்வதற்கும், 37 வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்வதற்கும், 2 வாக்குச்சாவடிகளுக்கு பெயா் மாற்றம் செய்வதற்கும் உத்தேச மாறுதல் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான ஆலோசனைகள் அல்லது புதிய கருத்துருகள் ஏதேனும் இருப்பின் மாவட்ட ஆட்சியா் அலுவலக தோ்தல் பிரிவிலோ அல்லது சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலரிடமோ எழுத்துப்பூா்வமாக ஒருவார காலத்துக்குள் அளிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுகின்றனா். பெறப்படும் கோரிக்கைகளின் பேரில் இந்தியத் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) நடராஜன், வட்டாட்சியா் (தோ்தல்) தாமோதரன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.