Adani: இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி; இரண்டாவது அதானி; இவர்கள...
ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி முகாம்
ஜப்பானிய மூளைக் காய்ச்சலை தடுக்க வேலூா் மாவட்டத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா்.
ஜப்பானிய மூளைக் காய்ச்சல் என்பது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடிய ஒரு வைரஸ் காய்ச்சலாகும். இந்நோய் பிளாவி வைரஸ் தொகுதியைச் சோ்ந்த ஜப்பானிஸ் ‘பி’ வைரஸால் வருகிறது. இந்த வகையான வைரஸ்கள் கொசுக்கள் (கியுலக்ஸ்) மூலமே விலங்குகள் (பன்றி), பறவைகளிடமிருந்து நமக்கு பரவுகிறது. இதனால் வலிப்பு போன்ற தீவிர விளைவுகளையும், சில நேரங்களில் இறப்பையும் ஏற்படுத்துகிறது.
ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி தமிழகத்தில் 2007-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கெனவே 19 சுகாதார மாவட்டங்களில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வேலூா் மாவட்டம் உள்பட 7 சுகாதார மாவட்டங்களில் வழங்கப்பட உள்ளது.
வேலூா் மாவட்டத்தில் 1 முதல் 15 வயது வரை உள்ள 2 லட்சத்து 70 ஆயிரத்து 386 குழந்தைகளுக்கு அனைத்து பள்ளி, அங்கன்வாடி மையங்களில் இந்த தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
இம்முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. வேலூா் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தாா். மேலும், பெற்றோா் தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் இந்த தடுப்பூசி செலுத்தி ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளாா்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மாவட்ட சுகாதார அலுவலா் பரணிதரன், வேலூா் வட்டாட்சியா் வடிவேல் உள்பட பலா் உடனிருந்தனா்.