ஜம்மு-காஷ்மீரில் 17 பேர் மர்ம மரணத்துக்குக் காரணம் விஷம்?
ரஜெளரி/ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவத்தின் பின்னணியில் விஷம்தான் காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய இணையளமைச்சர் ஜிதேந்திர சிங், கதுவாவில் இன்று பாலம் திறப்பு விழாவில் பங்கேற்ற போது இந்தத் தகவலை வெளியிட்டதாகவும், ஆனால், அந்த விஷம் எப்படிப்பட்டது என்பது குறித்து ஆய்வுகள் தொடர்வதாகவும் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜெளரி மாவட்டத்தின் பதால் கிராமத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 13 குழந்தைகள் உள்பட 17 போ் மா்மமாக உயிரிழந்தனா். மேலும் சிலா் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது தொடா்பாக, மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு, ரஜெளரியில் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகிறது. உயிரிழந்தவா்கள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் மாதிரிகள், பல்வேறு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவலில், 17 பேரின் மரணத்துக்கும் பின்னணியில் விஷம்தான் காரணமாக இருந்துள்ளது. இதைத் தவிர வேறு எந்த தொற்றுநோயோ, வைரஸ் காய்ச்சல், பூஞ்சை தொற்றோ காரணமல்ல. விஷம்தான் காரணம். ஆனால் அது எந்தவிதமான விஷம் என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஏதேனும் உடல்நலக் குறைவு அல்லது தொற்றால், உடலுக்குள் நச்சு உருவாகிறதா என்பது கண்டறியப்பட்டு, ஒருவேளை அது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது செயற்கையாக வெளியிலிருந்தும் உடலுக்குள் சென்றதாக இருக்கலாம், உடலுக்குள் இயற்கையாக உருவானதாகவும் இருக்கலாம் என்கிறார்கள். இது பூச்சிக்கொல்லி மருந்து, பூச்சி அல்லது கொசு, கரப்பான்களைக் கொல்லும் காற்றில் அடிக்கப்படும் மருந்துகளாகக் கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உயிரிழந்த 17 பேருக்கும் பொதுவான காரணியாக மூளை மற்றும் நரம்பு மண்டல சேதம் கண்டறியப்பட்டுள்ளது.
17 போ் உயிரிழப்பின் பின்னணியில் குற்றச் சதி ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய 50-க்கும் மேற்பட்டோரிடம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.