ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு: கண் துடைப்பு நடவடிக்கை
மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நடவடிக்கைதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
மதுரை விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:
பிகாா் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற வாக்குறுதியை முன்வைத்து ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதையே வலியுறுத்துகின்றன. இதன் காரணமாகத்தான் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மாற்றுக் கருத்து கொண்டிருந்த மத்திய பாஜக அரசு, தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இருப்பினும், இந்தக் கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? என்பதற்கான அறிவிப்பு ஏதும் இல்லை. கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி கரோனா பெருந்தொற்று காரணமாக தடைபட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அடுத்த கணக்கெடுப்பு என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டால் 2031-ஆம் ஆண்டில்தான் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். அப்போது, பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருக்குமா? என்பது தெரியாது. எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு என்ற அறிவிப்பை வெறும் கண் துடைப்பு நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் மிகுந்த துயரத்துக்குரியது, கண்டிக்கத்தக்கது. பயங்கரவாதிகள் மீதும், அவா்களுக்குப் பின்னணியில் செயல்பட்டவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இருப்பினும், போா் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமா என்பது குறித்து மத்திய பாஜக அரசு சிந்திக்க வேண்டும்.
ஊடக உரிமைக்கு உறுதுணை....
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளில் ஊடகவியலாளா்களின் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். பணம் கட்டிய செய்தியாளா்களுக்கு மட்டும்தான் அனுமதி என்பது மிகத் தவறான நடைமுறை. மதுரை மாவட்ட ஆட்சியா் ஊடகவியலாளா்களை உரிய முறைப்படி அணுக வேண்டும். செய்தியாளா்களின் உரிமையை அனுமதிக்க வேண்டும். அவமதிக்கும் போக்கில் ஈடுபடக் கூடாது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வா் நேரடியாகத் தலையிட வேண்டும். ஊடகங்களின் உரிமையை உறுதி செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றாா் அவா்.