உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் வரிக் கொள்கை: மத்திய அரசு
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கிய 70 வயது பாடகர்... ரூ.1.2 கோடியைப் பறித்த சைபர் கிரிமினல்கள்!
நாடு முழுவதும் அப்பாவி மக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கும் சம்பங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இது போன்ற குற்றங்கள் அதிக அளவில் நடக்கிறது. மும்பையில் வசிக்கும் 70 வயது ஹிந்துஸ்தானி கிளாசிக் இசை பாடகர் ஒருவரை இது போன்று டிஜிட்டல் முறையில் கைது செய்து, ரூ.1.2 கோடியை மர்ம கும்பல் அபகரித்துள்ளது. மேற்கு புறநகரில் வசிக்கும் அந்த பாடகருக்கு கடந்த ஜனவரி 31ம் தேதி மர்ம நபர் ஒருவர் போன் செய்து வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்களது வங்கிக் கணக்கோடு இணைந்த கிரெடிட் கார்டில் எடுக்கப்பட்ட ரூ.1 லட்சத்தை செலுத்தவில்லை என்று தெரிவித்தார். அதோடு இது குறித்து இன்ஸ்பெக்டரிடம் பேசுங்கள் என்று தெரிவித்து வேறு ஒருவருக்கு போனை டிரான்ஸ்பர் செய்தார்.

அதில் பேசிய நபர் தன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறினார். அதோடு முதியவரிடம், நீங்கள் பணமோசடியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள் என்று கூறினார். இம்மோசடி குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருக்கிறது என்று கூறி, சுப்ரீம் கோர்ட் உத்தரவு நகலையும் காட்டினார். மேலும் ரூ.300 கோடி பண மோசடியில் உங்களது வங்கிக் கணக்கு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மோசடி பணத்தில் 2 கோடி உங்களது வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே விசாரணை முடியும் வரை உங்களது கணக்கில் இருக்கும் பணம் முழுவதையும் தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும்படியும், விசாரணை முடிந்த பிறகு பணத்தை திரும்ப கொடுத்துவிடுவோம் என்றும் தெரிவித்தார்.
விசாரணை முடியும் வரை யாரிடமும் இது குறித்து பேசக் கூடாது என்றும், நீங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவீர்கள் என்று மோசடி பேர்வழி தெரிவித்தார். அதனை முதியவரும் நம்பிவிட்டார். போன் செய்த நபரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு தனது வங்கிக் கணக்கில் இருந்த பணம், பிக்சட் டெபாசிட்டில் இருந்த பணம் என மொத்தம் ரூ.1.2 கோடியை போனில் சொன்ன நபர் சொன்ன் வங்கி க்கணக்கிற்கு முதியவர் டிரான்ஸ்பர் செய்தார். அதன் பிறகுதான் தான் மோசடி செய்யப்பட்டு இருப்பதை முதியவர் உணர்ந்தார். இதையடுத்து இது குறித்து உடனே போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் ரூ.13 லட்சத்தை போலீஸார் மோசடி பேர்வழிகள் எடுக்க முடியாமல் பிளாக் செய்துவிட்டனர். இது தவிர முதியவர் செலுத்திய பணம் எந்த வங்கிக்கெல்லாம் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளதோ அந்த வங்கிக்கணக்கெல்லாம் முடக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடியில் பாதிக்கப்படும் மக்கள் 1930 என்ற ஹெல்ப்லைன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இது குறித்து மும்பை போலீஸாரிடம் பேசியபோது தாங்கள் யாரையும் டிஜிட்டல் முறையில் கைது செய்வது கிடையாது என்று தெரிவித்தனர்.