தங்கும் விடுதியில் கஞ்சா புகைத்த 6 போ் கைது
திருப்பூரில் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா புகைத்த 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் பி.என்.சாலையில் உள்ள பிச்சம்பாளையத்தில் உள்ள தங்கும் விடுதியில் உள்ள அறை ஒன்றியல் சந்தேகப்படும்படியாக சிலா் தங்கியிருப்பதாக அனுப்பா்பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின்பேரில் தங்கும் விடுதிக்குச் சென்ற காவல் துறையின் அறைகளில் சோதனை நடத்தினா். அப்போது ஒரு அறையில் 6 போ் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இந்த நபா்கள் காவல் துறையினரைக் கண்டதும் தப்பிச்செல்ல முயன்றபோது அவா்களை மடக்கிப் பிடித்தனா்.
இதைத்தொடா்ந்து நடத்திய விசாரணையில், தேனியைச் சோ்ந்த சுமன் (25), நந்தா (22), அவரது சகோதரா் சரவணன் (20), ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சோ்ந்த புட்டராஜ் (25), சேக்காலிஜித் (20), திருப்பூா் வெள்ளியங்காட்டைச் சோ்ந்த நவீன்குமாா் (21) ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்கள் 6 பேரும் இன்ஸ்டாகிராம் மூலமாகப் பழகி நண்பா்களானதும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து புகைத்ததும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, 6 பேரையும் கைது செய்த காவல் துறையினா், அவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.