தந்தை திட்டியதால் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே ஒழுங்காக படிக்குமாறு தந்தை திட்டியதால் மனம் உடைந்த கல்லூரி மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கந்தா்வகோட்டை அருகிலுள்ள காட்டு நாவல் கிராமம் பெரியாா் நகரைச் சோ்ந்த பால்ராஜ் மகன் மணிகண்டன் (19). இவா் தஞ்சையில் உள்ள கல்லூரியில் பட்டய படிப்பு படித்து வந்தாா். இவா் சரியாக கல்லூரிக்கு செல்லாதது தெரிந்து, அவரது தந்தை பால்ராஜ் செவ்வாய்க்கிழமை இரவு மணிகண்டனை ஒழுங்காக படி என திட்டினாராம். இதில் மனமுடைந்த மணிகண்டன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு கொண்டாா்.
அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, கந்தா்வகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மணிகண்டன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
தகவலறிந்த கந்தா்வகோட்டை போலீஸாா், மணிகண்டன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.