"தமிழ்நாடு முழுவதுமுள்ள CPIM அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்" - பெ.சண்முகம்
தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஆளும் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
சமீபத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ.டி ஊழியரான பட்டியலின இளைஞர் கவின் குமார் என்பவர், மாற்று சமூகத்தைச் சேர்ந்த காவல்துறை தம்பதியினரின் மகளை பரஸ்பரமாக காதலித்து வந்த நிலையில், அப்பெண்ணின் தம்பி சுர்ஜித் அவரை சாதி ஆணவப் படுகொலை செய்தது மாநில அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அப்போது, தனிச் சட்ட கோரிக்கை மேலும் வலுவாக முன்வைக்கப்பட்டது.

ஆனால் தி.மு.க அரசோ, இருக்கின்ற எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டமே போதும் என ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கான சட்டம் என்ற பார்வையில் தனிச் சட்ட கோரிக்கையின்மீது பாராமுகம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், சாதி ஆணவப் படுகொலைகளுக்களைத் தடுக்க வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டம் கொண்டு வர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், மாநில முழுவதுமுள்ள தங்களின் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற `ஆணவக் கொலைகளுக்கெதிரான சமூகநீதிக் கருத்தரங்கம்' நிகழ்ச்சியில் பேசிய பெ. சண்முகம், "தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்ள தனி ஏற்பாடுகள் இல்லை.
எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்.
தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்ய தனி ஏற்பாடு இல்லை. எனவே தமிழ்நாடு முழுவதுமுள்ள #CPIM அலுவலகங்களில் #Lovemarriage#Intercastmarriage நடத்தி கொள்ளலாம். சாதி ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை @CMOTamilnadu@mkstalin கொண்டு வர வேண்டும்- @Shanmugamcpim#STOPCsatearrogantkillingspic.twitter.com/XUZWLRpbYR
— CPIM Tamilnadu (@tncpim) August 25, 2025
காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன. பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகியிருக்கிறது.
இந்த சூழலை அரசு பயன்படுத்திக் கொண்டு, வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சாதி ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை முதலமைச்சர் கொண்டு வர வேண்டும்" என்று கூறினார்.