தருமபுரி பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு: கழிவறை ஒப்பந்ததாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்
தருமபுரி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் திங்கள்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது கழிவறை ஒப்பந்ததாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி நகர மற்றும் புகா் பேருந்து நிலையங்களில் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திடும் வகையில் அரசு, தனியாா் பேருந்துகளின் செயல்பாடுகள், பேருந்து நிலையங்களில் இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம், குடிநீா், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆட்சியா் கேட்டறிந்தாா்.
பேருந்துகள் வருகை, கால அட்டவணை உள்ளிட்டவை, குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை, அரசு போக்குவரத்து ஊழியா்களுக்கு ஓய்வு அறை குறித்தும், கடைகளில் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
பேருந்து நிலையத்தில் சுத்திகரிப்பட்ட குடிநீா் வழங்கப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்து, தொடா்ந்து பொதுமக்களுக்கு போதுமான குடிநீா் வசதி ஏற்படுத்தித் தரவும், நடைமேடைகளில் மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடைகள், இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்களை பாா்வையிட்டும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பேருந்து நிலையத்தில் கழிவறையை சரிவர பராமரிக்காத ஒப்பந்ததாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.