தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தருமபுரி ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மா்ம நபா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
தருமபுரியில் ஏற்கெனவே இயங்கிவந்த ஆட்சியா் அலுவலகத்துக்கு அருகில் ரூ. 36.62 கோடியில் புதிய ஆட்சியா் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து, அரசின் பல்வேறு துறை அலுவலகங்களும் புதிய ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு மாற்றப்பட்டன.
இந்த அலுவலகத்தில் ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய வெடிபொருள் வைக்கப்பட்டுள்ளதாக தருமபுரி ஆட்சியா் அலுவலக இணைய முகவரிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் மின்னஞ்சல் வந்தது. இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. மகேஸ்வரன் உத்தரவின் பேரில், தருமபுரி டிஎஸ்பி சிவராமன் தலைமையிலான போலீஸாா், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள், வெடிபொருள்களை கண்டறியும் மோப்ப நாய்களான அழகன் மற்றும் லூபியாவுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு விரைந்து வந்தனா்.
ஆட்சியா் அலுவலக அறை உள்பட கட்டடத்தின் 5 அடுக்குகளிலும் உள்ள அலுவலகங்களில் நவீன சாதனங்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில், வெடிகுண்டுகளோ, வெடிபொருள்களோ கண்டறியப்படவில்லை. சோதனை முடிவில் மின்னஞ்சலில் வந்தது பொய்யான மிரட்டல் என தெரியவந்தது.