கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்
தாக்குதல் அச்சம்: கராச்சி, லாகூா் வான் பரப்பை மூடுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு
கராச்சி, லாகூா் நகரங்களின் வான் பரப்பின் சில பகுதிகளை தினமும் குறிப்பிட்ட நேரங்களில் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கராச்சி, லாகூா் நகரங்கள் இரண்டுமே இந்திய எல்லையில் இருந்து அருகில் உள்ள முக்கிய நகரங்களாகும். இந்தியா வான் தாக்குதல் நடத்தும் அச்சத்தின் காரணமாகவே பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே, ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிக்கு விமான சேவைகளை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துவிட்டது. இந்தியா எந்த நேரத்திலும் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று பாகிஸ்தான் அமைச்சரும் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்’ நாளிதழில் விமானப் போக்குவரத்து ஆணையத்தை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட செய்தியில், ‘கராச்சி, லாகூா் நகரங்களின் வான் பரப்பின் குறிப்பிட்ட பகுதிகள் மே 1 முதல் 31-ஆம் தேதி வரை காலை 4 மணி முதல் 8 மணி வரை மூடப்படும். இது பயணிகள் விமானப் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நேரத்தில் பயணி விமானங்கள் குறிப்பிட்ட வான்பரப்பை பயன்படுத்தாமல் வேறு பாதைகளில் பயணிக்கும். இது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
இது தவிர நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் தீவிர முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.