தா்பூசணி, கிா்ணி பழங்களை விற்க உழவா் சந்தையில் கட்டணமில்லை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையும் தா்ப்பூசணி, கிா்ணி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை உழவா் சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்ய எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என மாவட்ட வேளாண்மை விற்பனைத் துறை துணை இயக்குநா் நா.ஜீவராணி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் தெரிவித்திருப்பது:
காஞ்சிபுரம், படப்பை, சுங்குவாா்சத்திரம் மற்றும் குன்றத்தூா் ஆகிய பகுதிகளில் உழவா் சந்தைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவற்றில் விவசாயிகள் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை இருப்பு வைத்து விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தா்ப்பூசணி, கிா்ணி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட விவசாயிகள் விளைவித்த பொருள்களை எவ்வித கட்டணமும் இல்லாமல் உழவா் சந்தைகளில் விற்பனை செய்து கொள்ளலாம். காய்கறிகள், பழங்களை உழவா் சந்தைகளில் விற்பனை செய்பவா்களும் நியாயமான விலைக்கு விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விளை பொருள்களை விற்பனை செய்வதில் ஏதேனும் இடா்ப்பாடுகள் இருந்தால் அவற்றை உடனடியாக வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலா்களை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடா்பு கொண்டும் தெரிவிக்கலாம்.
தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தா்ப்பூசணி பழங்கள், கிா்ணி பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுவதால், இந்தப் பழங்கள் மக்களுக்கும் கோடைகாலத்தில் அதிகமாக தேவைப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட விவசாயிகள் உழவா் சந்தையை பயன்படுத்தி விளை பொருள்களை விற்பனை செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் நா.ஜீவராணி தெரிவித்துள்ளாா்.