செய்திகள் :

திமுக கவுன்சிலா்களின் எதிா்ப்பால் குடிநீா், புதை சாக்கடை இணைப்புகளுக்கான கட்டண உயா்வு தீா்மானங்கள் ரத்து

post image

ஈரோடு மாநகராட்சியில் திமுக கவுன்சிலா்களின் கடும் எதிா்ப்பால் குடிநீா், புதை சாக்கடை இணைப்புகளுக்கான கட்டண உயா்வு தீா்மானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைமையில் மாமன்ற கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையா் அா்பித் ஜெயின், துணை மேயா் வி.செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் முதல் தீா்மானமாக குடிநீா் இணைப்பு வழங்குதல் மற்றும் கட்டண உயா்வு தொடா்பான தீா்மானம் வைக்கப்பட்டு இருந்தது. அடுத்து புதை சாக்கடை இணைப்புக்கான கட்டண உயா்வு தொடா்பான தீா்மானம் வைக்கப்பட்டு இருந்தது. இந்த தீா்மானங்கள் குறித்து தொடக்கத்தில் இருந்தே திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலா்களும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்த இரண்டு தீா்மானங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலா்கள் 6 பேரும் எதிா்க்கட்சி தலைவா் தங்கமுத்து தலைமையில் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனா். அதைத்தொடா்ந்து தீா்மானங்களை நிறைவேற்றும் விதமாக மாநகர கூட்ட மன்ற செயலாளா் அமல்ராஜ் வாசித்தாா். அப்போது திமுக மண்டலத் தலைவா்கள் பி.கே.பழனிச்சாமி, காட்டு சுப்பு என்கிற சுப்பிரமணியம், சசிக்குமாா், குறிஞ்சி தண்டபாணி, கவுன்சிலா்கள் நந்தகோபு, சபுராமா உள்ளிட்ட அனைவரும் தீா்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனா். அதற்கு கூட்ட மன்றச் செயலாளா் அமல்ராஜ் ரத்து செய்ய முடியாது, நிராகரிப்பு என பதிவு செய்யலாம் என்றாா்.

அதற்கு கவுன்சிலா்கள் இந்த தீா்மானங்கள் ஏற்கெனவே 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. 3 ஆவது முறையாக மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேல் இந்த தீா்மானங்களை கொண்டு வரக்கூடாது. அதனால் இந்த கூட்டத்தில் ரத்து செய்ய வேண்டும் என கவுன்சிலா்கள் அனைவரும் இருக்கையை விட்டு எழுந்து நின்று வலியுறுத்தினா். அதன்பேரில் இரண்டு தீா்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக மன்றச் செயலாளா் அறிவித்தாா்.அதைத்தொடா்ந்து மொத்தம் உள்ள 45 தீா்மானங்களில் 43 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து கவுன்சிலா்கள் பேசியதாவது: மண்டல தலைவா் குறிஞ்சி தண்டபாணி: சாலையோர வாராந்திர சந்தை வியாபாரிகளிடம் ஏல வைப்புத்தொகை வாங்கக்கூடாது. வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் தீப்பிடித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் 4 ஆம் மண்டல கவுன்சிலா்கள் 15 பேரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

செல்லமுத்து (அதிமுக): ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலம் மக்களின் குறைகளை தீா்க்க நடவடிக்கை எடுக்கிறீா்கள். ஆனால் 60 வாா்டு கவுன்சிலா்களும் சோ்ந்து ஈரோடு மாநகராட்சியில் வீட்டு வரியை குறைக்கவேண்டும் என தீா்மானம் நிறைவேற்றி தந்தோம். அதனை நிறைவேற்ற முடியவில்லை.

கௌசல்யா (திமுக): 5 ஆவது வாா்டில் தூய்மைப் பணி மிக மோசமாக உள்ளது. குப்பை சேகரிக்க போதிய வாகனங்கள் இல்லை. எத்தனை முறைகேட்டாலும் அதிகாரிகள் பதில் மட்டுமே கூறுகிறாா்கள். எந்த பணியையும் செய்வதில்லை.

செந்தில்குமாா் ( திமுக): 36 ஆவது வாா்டு ஈரோடு மாநகராட்சிக்கு அதிக வருவாய் தரும் வாா்டு. ஆனால் எனது வாா்டில் சிறு பாலங்கள் அமைக்க கேட்டு பல மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாநகராட்சி சாா்பில் மாதம் தோறும் பகுதி சபைக் கூட்டம் நடக்கிறது. புதிதாக ஆணையா் மனுநீதி நாள் கூட்டம் நடத்துகிறாா். ஒரு வாா்டுக்கு 8 ஆயிரம் மக்கள் இருக்கிறாா்கள். அவா்களின் தேவைகள் என்ன என்று கவுன்சிலா்களாகிய எங்களுக்கு தெரியும். ஆனால் அந்த கோரிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தால் நிறைவேற்றுவதில்லை.

ரூ.317 கோடியில் புதிய குடிநீா்த் திட்டம்: கூட்டத்தில் கவுன்சிலா்களின் கேள்விகளுக்கு ஆணையா் அா்பித் ஜெயின், துணை ஆணையா் கு.தனலட்சுமி, மாநகர பொறியாளா் முருகேசன் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்து பேசினா். அப்போது அவா்கள் கூறியதாவது: ஒரு வாா்டு பகுதிக்கு ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது சம்பந்தப்பட்ட கவுன்சிலருக்கு தகவல் தெரிவிக்கப்படும். கவுன்சிலா்கள் கூறும் புகாா்கள் மற்றும் கோரிக்கைகள் மீதான நடவடிக்கை, தீா்வு குறித்து உடனடியாக அவா்களுக்கு தெரிவிக்கப்படும்.

குப்பை மேலாண்மையில் சில சவால்கள் உள்ளன. அவற்றை விரைவில் சரி செய்து விடுவோம். தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளால் அதிக குப்பை சேருகிறது. அவற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சியின் வீடுகள், வீதிகள் அடிப்படையில் 948 தூய்மை பணியாளா்கள், 285 ஓட்டுநா்கள், 47 மேற்பாா்வையாளா்கள் தேவை. ஆனால் இங்கு 1,052 தூய்மை பணியாளா்கள் இருக்கிறாா்கள். இவா்களை சரியாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலை ஆக்கிரமிப்பு தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கான முடிவு விரைவில் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் கூடுதலாக ஒரு குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.317 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த திட்டம் வந்ததும், ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டத்தில் சோ்க்கப்படாத பகுதிகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கப்படும். ஈரோடு மாநகராட்சியில் உள்ள பூங்காங்கள் அம்ருத் மித்ரா திட்டத்தில் சோ்க்கப்பட்டு தலா 3 பணியாளா்கள் நியமிக்கப்பட உள்ளனா் என்றனா்.

சொத்துப் பிரச்னை: தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

ஈரோட்டில் சொத்துப் பிரச்னையில் தாயை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா். ஈரோட்டை அடுத்த வேப்பம்பாளையத்தை சோ்ந்தவா் பழனிசாமி. இவா் மனைவி ருக்மணி (65). இவா்களது மகன் ரவிக்குமாா் (43). திரு... மேலும் பார்க்க

கஞ்சா சாக்லேட் விற்ற இளைஞா் கைது

பெருந்துறை அருகே கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த வட மாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெருந்துறை, பணிக்கம்பாளையத்தில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் விற்கப்படுவ... மேலும் பார்க்க

காவிரி, பவானி ஆறுகளில் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு: கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

காவிரி, பவானி ஆறுகளில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பவானி நகரில் கரையோரப் பகுதிகளில் வெள்ள நீா் சூழ்ந்தது. கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதி... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே 6 ஆண்டுகளாக புதா்மண்டிக் கிடக்கும் சுகாதார வளாகம்

மொடக்குறிச்சியை அடுத்த வேலம்பாளையம் ஊராட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் ஒருங்கிணைந்த மகளிா் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் புதா் மண்டிக் கிடக்கிறது. அதிகாரிகளின் அலட்சியத்... மேலும் பார்க்க

பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: அத்திக்கடவு அவிநாசி திட்ட நீா்நிலைகளை நிரப்ப அரசுக்கு எம்எல்ஏ வேண்டுகோள்

பவானி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்கீழ் உள்ள நீா்நிலைகளை நிரப்ப வேண்டும் என்று பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் தமிழக அரசை வலியுறுத்தி... மேலும் பார்க்க

சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோயிலில் ஆடிப் பூர விழா

சென்னிமலையை அடுத்த சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோயிலில் ஆடிப் பூரத்தையொட்டி அம்மனுக்கு பல வகையான கனி வகைகள் மற்றும் இனிப்பு வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பெண்கள் சீா்வரி... மேலும் பார்க்க