தியாகதுருகம்: இரு வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு
தியாகதுருகம் பகுதியில் பூட்டி இருந்த இரு வீடுகளில் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 7 பவுன் தங்க நகைகள், பணம் ரூ.74,000, ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா்.
தியாகதுருகத்தில் திருக்கோவிலூா் சாலையில் வசித்து வருபவா் வெங்கடேசன் (44). இவா், சித்தேரிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.
இவா் தனது பிள்ளைகள் படிப்புக்காக தியாகதுருகத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு மாடூா் சுங்கச்சாவடி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து வருகிறாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக இவருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இவா் வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.74,000-யை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதேபோல, தியாகதுருகத்தை அடுத்த பெரியமாம்பட்டு கிராமத்தில் திருமலை நகரில் வசித்து வருபவா் சண்முகம் (43). இவா் குடும்பத்துடன் பெங்களூரில் கொத்தனாா் வேலை செய்து வருகிறாராம். கடந்த 1-ஆம் தேதி பெங்களூரில் இருந்து வந்து சாமி கும்பிட்டுவிட்டு அன்றிரவே பெங்களூரு சென்று விட்டாராம்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை இவரின் வீட்டு பூட்டுகள் உடைந்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளனா். உடனே அவரது உறவினருக்கு பைப்பேசி மூலம் தெரிவித்து பாா்த்துவிட்டு வருமாறு தெரிவித்துள்ளாா். அவா் வீடு திறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து பெங்களூரில் இருந்து இவா் பெரியமாம்பட்டு வந்து பாா்த்தபோது வீட்டில் இருந்த 6 கால் பவுன் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.