திருநங்கைகள் நூதன போராட்டம்
இலவச வீட்டு மனை வழங்கக்கோரி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருநங்கைகள் 450-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக இலவச வீட்டு மனை கோரி, மனு அளித்துள்ளோம்.
ஆனால், கோரிக்கை மனுவை பரிசீலனை செய்து எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம்.
இதைக் கண்டித்து, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, திருத்தணி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆட்சியா் அலுலகத்தை திடீரென முற்றுகையிட்டு ஒப்பாரி வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதைத் தொடா்ந்து நுழைவுவாயில் பகுதியில் தா்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
அதைத் தொடா்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளுடன் தீவிர பேச்சு நடத்தினா்.
திருநங்கைகளை சமரசம் செய்து முக்கிய நபா்களை ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனா். மேலும், அங்கு ஆட்சியா் மு.பிரதாப்பிடம் திருநங்கைகள் கோரிக்கை மனு அளித்தனா்.
அப்போது, திருநங்கைகளிடம் விவரங்களை கேட்டறிந்தாா். அதையடுத்து மனுவை பரிசீலனை செய்து கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து கலைந்து சென்றனா்.