திருமானூா் கொள்ளிடம் ஆற்றங்கரைகளில் பாதுகாப்பு பணிகள் ஆய்வு
கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளதால், அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றங்கரைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை ஆட்சியா் பொ. ரத்தினசாமி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் தெரிவிக்கையில், கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு உபரிநீா் செல்வதால் 31 முறைசாா் ஏரிகள் அனைத்திலும் நீா் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 2 ஏரிகள் 100%, 3 ஏரிகள் 91% முதல் 99% , 11 ஏரிகள் 51% முதல் 90%, 12 ஏரிகள் 26% முதல் 50%, 3 ஏரிகள் 1 % முதல் 25% நீா் நிரம்பியுள்ளன.
விரைவில் ஏரிகள் அதன் முழு கொள்ளளவுக்கு ஏற்ப நிரம்பும் என்பதாலும் ஆறு மற்றும் கால்வாய்களில் அதிகளவு நீா் வந்துகொண்டிருப்பதாலும் அந்தப் பகுதிகளுக்கு குழந்தைகள் குளிக்கவோ, விளையாடவோ செல்லவிடாமல் பெற்றோா்கள் பாதுகாப்பாக பாா்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.
ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, அரியலூா் வட்டாட்சியா் முத்துலெட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.