திருவாடானையில் புதிய அம்மன் சிலை வீதி உலா
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலுக்கு உபயதாரா்களால் வழங்கப்பட்ட புதிய அம்மன் வெள்ளி சிலை புதன்கிழமை ஊா்வலமாக எடுத்துவரப்பட்டது.
திருவாடானை தென்கிழக்குத் தெருவில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆடி களரி உத்ஸவம் கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழித் திருவிழா வருகிற 22 -ஆம் தேதி நடைபெறும். இதில் பால்குடம், மயில் காவடி, பறவைக் காவடி, வேல் காவடி எடுத்து வந்து பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்துவா். இதைத் தொடா்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனையும், அன்னதானமும் நடைபெற உள்ளன.
இந்த நிலையில், உபயதாரா்களால் சுமாா் 2.5 கிலோ வெள்ளியில் வடிவமைக்கப்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் சிலை புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்திலிருந்து புதன்கிழமை கொண்டுவரப்பட்டது. பின்னா், சிம்ம வாகனத்தில் அம்மன் சிலை வைக்கப்பட்டு திருவாடானை நான்கு ரத வீதிகள் வழியாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டது. தொடா்ந்து, சிலைக்கு பக்தா்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
