தில்லியில் புகழ்பெற்ற ஷீஷ் மஹால் பூங்கா புதுப்பிப்பு: மத்திய அமைச்சா் திறந்து வைத்தாா்
தேசிய தலைநகரில் உள்ள ஷாலிமாா் பாக் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட ’ஷீஷ் மஹால் பூங்காவை’ மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா மற்றும் துணை நிலை ஆளுநா் வி. கே. சக்சேனா ஆகியோா் புதன்கிழமை திறந்து வைத்தனா்.
ஷீஷ் மஹால் பூங்காவை மறுசீரமைப்பு பணிகள் தில்லி மேம்பாட்டு ஆணையத்தால் (டி. டி. ஏ) மேற்கொள்ளப்பட்டன, மேலும் இந்திய தொல்லியல் துறையும் (ஏ. எஸ். ஐ) இந்த திட்டத்தில் பணியாற்றியது. இந்நவிகழ்ச்சியில் புதன்கிழமை பேசிய கேந்திர சிங் ஷெகாவத், முந்தைய ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமா்சித்தாா்.
அப்போது பேசிய அவா் , ‘ இந்த மறுசீரமைப்புத் திட்டத்தை எல். ஜி. சக்சேனா முதன்முதலில் மேற்கொண்டபோது, தில்லியில் ஒரு வெறுக்கத்தக்க அரசாங்கம் இருந்தது. இப்போது, தில்லியில் இரட்டை என்ஜின் போல பல மடங்கு பலம் கொண்ட அரசாங்கம் இயங்கி வருகிறது‘ என்றாா் கஜேந்திர சிங் ஷெகாவத்.
இந்த திறப்பு விழா நிகழ்சத்சியில் பேசிய தில்லி முதல்வா் ரேகா குப்தா, இந்த அரசாங்கம் தில்லியை ’புதிய தில்லியாக’ மாற்றும் . கடந்த மாதம் அந்த இடத்திற்கு வந்து ஆய்வு செய்தபோது, பூங்காவை அழகுபடுத்தல் மற்றும் இயற்கையை ரசிக்கும் பணிகளுக்கு தான் உத்தரவிட்டதாக தெரிவித்தாா்.
வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் அமைந்துள்ள இந்த ‘ஷீஷ் மஹால்‘ 17 ஆம் நூற்றாண்டில் முகலாய அரசா் ஷாஜகானால் கட்டப்பட்ட அழகு மிகுந்த கட்டடமாகும். இந்த கட்டடம் கண்ணாடி வேலைப்பாடு மற்றும் முகலாய பாணி கட்டக்கலைக்கு புகழ்பெற்றது. பெரிய முகலாய தோட்ட வளாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியான இந்த கட்டடம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.