நியதி சேத்ரான்ஷ்: அன்று 3-வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை; ஆனால், இன்று...
பலநேரங்களில், நமக்கு எந்த வித தொடர்புமில்லாத, எங்கோ யாரென்ற தெரியாத ஒருவர் அடைகிற வெற்றி நமக்கு பெரும் தன்னம்பிக்கையைக் கொடுக்குமல்லவா? அதுவும் சிறுவயதிலேயே துன்பங்களைக் கடந்து ஒருவர் சாதித்தால்... அப்படித்தான் டெல்லியைச் சேர்ந்த 13 வயது நியதி சேத்ரான்ஷ் என்கிற சிறுமியை வாரி அணைத்துக் கொண்டாடத் தோன்றுகிறது. யார் இந்த நியதி சேத்ரான்ஷ்? அவரைக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? அவர் செய்த சாதனைதான் என்ன?

நியதி பிறந்தபோது, 'பெண் குழந்தை' என்கிற ஒரே காரணத்துக்காக பெற்ற தகப்பனே மருத்துவமனைக்கு வந்து பார்க்கவில்லையாம். பச்சிளம் குழந்தையை கைகளில் ஏந்தியபடி புகுந்த வீட்டுக்கு வந்த நியதியின் அம்மாவை, அந்த வீடு வேண்டாத விருந்தாளியாகவே பார்த்திருக்கிறது. இதைவிடக் கொடுமை, நியதி ஒரு மாத கைக்குழந்தையாக இருந்தபோது அவளுக்குத் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது என, அவளை ஒரு அறையில் தனியாக வைத்திருக்கிறார் அவள் அப்பா. அதே நாளில், நியதியை மூன்றாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக கீழே வீசி எறிந்திருக்கிறார். ஆனால், பக்கத்து வீட்டு நபர் ஒருவர் நியதியை கீழே விழாமல் பிடித்துக் காப்பாற்றியிருக்கிறார்.
அன்றைக்கே மகளைத் தூக்கிக்கொண்டு பிறந்த வீட்டுக்கு வந்திருக்கிறார் நியதியின் அம்மா. 'குழந்தைக்காக இன்னொரு திருமணம் செய்துகொள்' என்றவர்களின் அறிவுரைகளையும் புறந்தள்ளி விட்டு, இனி தன்னுடைய வாழ்க்கை மகளுக்காக மட்டுமே என்று முடிவெடுத்திருக்கிறார். நியதியின் அப்பாவைப் போன்ற ஓர் ஆணுடன் வாழ்ந்தப்பெண்ணால், இதைத் தவிர வேறு என்ன முடிவு எடுத்துவிட முடியும்?
குழந்தைகள் நடக்க ஆரம்பித்தபிறகு பொம்மைகளை மட்டுமல்ல, கிச்சனில் இருக்கிற பாத்திரங்களையும் எடுத்து வைத்து விளையாடுவார்கள். ஆனால், நியதி 6 மாதக் குழந்தையாக இருக்கும்போது அந்தப் பாத்திரங்களில் ஒலி எழுப்பி ரசிக்க ஆரம்பித்திருக்கிறார். மகளுக்கு இசையின்மீது ஆர்வம் இருக்கிறது என புரிந்துகொண்ட நியதியின் அம்மா, குழந்தைகளுக்கான பொம்மை கீ போர்ட் வாங்கிக்கொடுத்திருக்கிறார். இந்த கீ போர்டில் தன் பிஞ்சுக்கரங்களால் விதவிதமாக ஒலிகளை எழுப்ப ஆரம்பித்திருக்கிறாள் நியதி. மகளின் எதிர்காலம் இசையில்தான் தொடங்கவிருக்கிறது என்பதை புரிந்துகொண்ட நியதியின் அம்மா, அவளை இசை வகுப்பில் சேர்த்திருக்கிறார். பிறகு நியதியின் ஐந்தாவது வயதில் லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் பியானோ தேர்வுகளை எழுத ஆரம்பித்திருக்கிறார்.
இதன்பிறகு நியதியின் இசைப்பயணத்தில், அவருடைய தாயின் அன்பும் விதவிதமான இசைக்கருவிகளும் மட்டுமே இருந்து வந்திருக்கிறது. தற்போது பியானோவைத் தவிர, கீ போர்டு, உகுலேலே, தபலா, புல்லாங்குழல், மவுத் ஆர்கன், மெலோடிகா, மரக்காஸ், கலிம்பா, கசூ, ஒக்கரினா, தப்லி உள்ளிட்ட 42 இசைக்கருவிகளை நியதியால் வாசிக்க முடியும். தேசிய கீதத்தை அதிகபட்சமாக 15 இசைக்கருவிகளில் வெறும் 65 விநாடிகளில் இசைக்கிற சாதனையையும் நியதி செய்திருக்கிறார். இந்த சாதனை ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
'என் அம்மா மிகவும் உறுதியானவர். எனக்குள் இருக்கிற இசையை முழுமையாக வெளிக்கொண்டு வர அவர் தொடர்ந்து முயற்சி செய்கிறார். அதனால்தான், தற்போது எனது ஏழாம் நிலை பியானோ தேர்ச்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன். நானும் அம்மாவும் ஒன்றாக விளையாடுகிறோம், சுற்றுலா செல்கிறோம், ஒருவருக்கொருவர் துணையாக இருக்கிறோம். சிறந்த இசையமைப்பாளர் ஆக வேண்டுமென்பதே என்னுடைய லட்சியம்' என்கிற நியதி, தன் அப்பாவைப்போன்ற ஆண்களுக்கும் ஒரு செய்தி சொல்லியிருக்கிறார். அது, பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் என்பதுதான்.
எத்துணை கூர்மையான வார்த்தைகள்!