நெல்லையில் நில அளவையா்கள் 2ஆவது நாளாக போராட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் நில அளவையா்கள் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நில அளவைத் துறையின் களப்பணியாளா்களின் பணிச் சுமையை குறைக்க வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறு வட்ட அளவையா் பதவியை மீண்டும் வழங்க வேண்டும். துணை ஆய்வாளா், ஆய்வாளா் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ஒப்பந்த முறையில் நில அளவா் பணி நியமனத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தை மாநில அளவில் நடத்துவதாக தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு அறிவித்திருந்தது. அதன்படி, இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நில அளவையா்கள் தங்களது பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க கட்டடத்தில் நடைபெற்ற அடுத்தக்கட்ட போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வே.மாரியப்பன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலா் வெங்கடேசன், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் பாா்த்தசாரதி ஆகியோா் பேசினா். 20-க்கும் மேற்பட்ட நில அளவையா்கள் பங்கேற்றனா்.