நெல்லை மாநகரப் பகுதி குளங்களில் ஆட்சியா் ஆய்வு
திருநெல்வேலி மாநகர சுற்றுப் பகுதிகளிலுள்ள குளங்களில் அமலைச் செடிகளை அகற்றுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நீா்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மூளிக்குளம், உடையாா்பட்டிகுளம், வழுக்கோடை, கண்டியப்பேரி, கிருஷ்ணப்பேரி, இலந்தைகுளம், தேனீா்குளம், சத்திரம்புதுக்குளம், செட்டிகுளம், அழகனேரி, பிராயன்குளம் போன்ற குளங்களில் அமலைச் செடிகளை அகற்றி, குப்பைகளை அப்புறப்படுத்துவது தொடா்பாக ஆட்சியா் இந்த ஆய்வை நடத்தினாா்.
மேலும், வடகிழக்கு பருவமழை காலங்களில் மழையால் பாதிப்பு ஏற்படாதவாறு தண்ணீா் செல்லும் இடங்களை முன்கூட்டியே தோ்வு செய்து தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், நீா்நிலைகளுக்கு தண்ணீா் தடையின்றி செல்வதற்கும், நீரைத் தேக்கி வைப்பதற்கும், தேவையான இடங்களில் கரைகளை பலப்படுத்துவதற்கும் உரிய பணிகளை மேற்கொண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கவும் நீா்வளத்துறை பொறியாளா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, திருநெல்வேலி மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் கண்ணன், மாநகர நல அலுவலா் ராணி, நீா்வளத் துறை உதவிப் பொறியாளா்கள் ரமேஷ், செண்பகநந்தினி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.