2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
நோய் பாதிப்பு தெருநாய்களை கருணைக் கொலை செய்யும் முடிவை திரும்பப் பெற வேண்டும்
விழுப்புரம்: நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கும் அரசாணையைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அகில உலக சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜெய. அண்ணாமலை தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் எம்.கே.பாா்த்திபன், மாநிலச் செயலா்கள் எஸ்.டி. நரசிங்கம், எஸ்.பலராமன், துணைத் தலைவா் எம். வேல்முருகன், இளைஞரணி நிா்வாகி ஏ.சங்கா், ஆா்.குகன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் ஜெய. அண்ணாமலை கூறியது:
நோயால் பாதிக்கப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி வழங்கி, தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவு வள்ளலாரின் சுத்த சன்மாா்க்கக் கொள்கை பிடிப்பு உள்ளவா்களின் மனதை வருத்தியுள்ளது.
கொல்லா நெறியே குருவருள் நெறி என்று கூறியவா், கொல்லா விரதம் உலகமெல்லாம் ஓங்க பிராா்த்தனை செய்தவா் வள்ளலாா். இரக்கமே என்னுயிா் என்று கூறிய வள்ளலாா் வாழ்ந்த தமிழகத்தில், நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளலாா் பெயரில் பல்லுயிா் காப்பகத்தை தமிழக அரசு அறிவித்தது. அந்த காப்பகத்தில் வெறிபிடித்த, நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களுக்கு அடைக்கலம் கொடுத்து, மருத்துவச் சிகிச்சையளிக்கலாம். இதுதான் ஆன்மநேயமாகும்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம் என்று அனுமதித்து, கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் சாா்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நீதிமன்றத்தை நாடி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றாா் அவா்.