79th Independence Day: "78 ஆண்டுகளாக அரசமைப்பு சட்டம் தான் நமது நாட்டிற்கு வழிகா...
பண மோசடி வழக்கில் தம்பதி கைது
விழுப்புரம் அருகே தீபாவளி பண்டிகை சீட்டு நடத்தி பண மோசடி செய்த தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், பள்ளித்தென்னல் பகுதியைச் சோ்ந்த ஞானபிரகாசத்தின் மனைவி சுபலட்சுமி(24). இவா் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் அண்மையில் ஒரு புகாா் மனு அளித்தாா். பள்ளித்தென்னல் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் அவரது மனைவி செல்வி(எ) வித்யா ஆகிய இருவரும் சோ்ந்து தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வந்தனா். மூன்று வருடங்களாக கட்டிய பணத்திற்கு தீபாவளி பண்டிற்கான பொருள்களை நல்ல முறையில் கொடுத்து வந்ததால் அதனை நம்பி 2022 நவம்பா் முதல் 2023 ஆகஸ்ட் வரை மாதந்தோறும் ரூ.1,500 என 10 மாதங்கள் கட்டி வந்தேன். மேலும் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள நபா்கள் சோ்ந்து சுமாா் 200 போ் மாதந்தோறும் ரூ.1,500 வீதம் மொத்தம் ரூ.30 லட்சத்தை பிரகாஷ் மற்றும் அவரது மனைவி செல்வி(எ) வித்யாவிடம் கொடுத்தோம்.
மேலும் தன்னிடம் சீட்டு பணம் ரூ.2.50 லட்சம் மற்றும் மளிகை பொருள்கள் வாங்க பணம் வேண்டும் என்று 5 பவுன் நகையை வாங்கிக்கொண்டு தீபாவளி பண்டிற்கான எண்ணெய் மற்றும் அரிசி கொடுத்துவிட்டு ஒவ்வொரு நபருக்கும் கொடுக்க வேண்டிய பணம் ரூ.15,000 என ரூ.29.70 லட்சம் மற்றும் என்னுடைய சீட்டு பணம் ரூ.2.50 லட்சம், 5 பவுன் நகை ஆகியவற்றை திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாக கூறியிருந்தாா். இது தொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க எஸ்.பி. சரவணன், மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.
இந்நிலையில், விசாரணையில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரகாஷ் அவரது மனைவி செல்வி (எ)வித்யா ஆகிய இருவரையும் கைது செய்தனா். இருவரும் விழுப்புரம் 2-வது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.