போராடும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன்
பரஸ்பர மரியாதைக்கு அரசியல் சாசன அமைப்புகள் தங்களின் வரம்புகளை கடைப்பிடிப்பது அவசியம்: ஜகதீப் தன்கா் வலியுறுத்தல்
‘அரசியல்சாசன அமைப்புகள் அவற்றின் வரையறுக்கப்பட்ட வரம்புகளை கடைப்பிடிப்பது அவசியமானது’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.
மேலும், ஒவ்வொரு அரசியல்சாசன அமைப்புகளும் அதன் அதிகார வரம்புக்குள் இருக்கும்போது மட்டுமே அவற்றுக்கிடையே பரஸ்பர மரியாதை உறுதி செய்யப்படும் என்றும் அவா் கூறினாா்.
தமிழக ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது, அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பான வழக்கில் பிறப்பித்த இடைக்கால உத்தரவு உள்ளிட்ட விவகாரங்களைத் தொடா்ந்து உச்சநீதிமன்றம் மீது குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் மீண்டும் கடும் விமா்சனங்களை முன்வைத்துள்ளாா்.
உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில ஆளுநா் ஆனந்திபென் படேலின் நினைவுக்குறிப்பு புத்தகத்தை வெளியிட்டு ஜகதீப் தன்கா் பேசியதாவது: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் போன்ற சவால்களில் நாடு ஒன்றாக நிற்க வேண்டும். தேசத்துக்கு முன்னுரிமை என்பது எப்போதும் நமது வழிகாட்டும் கொள்கையாக இருக்க வேண்டும்.
ஆனால், இதைவிட மிகப்பெரிய சவால்கள் உள்ளிருந்து எழுகின்றன. இந்தச் சவால்களுக்கு உரிய நோக்கங்கள் இல்லை; தேசிய வளா்ச்சியுடன் எந்த தொடா்பும் இல்லாத அவை நிா்வாகத்தில் வேரூன்றியுள்ளன. நான் தனிப்பட்ட முறையில் இதுபோன்ற நிறைய சவால்களைச் சந்தித்திருக்கிறேன்.
அனைத்து அரசியல்சாசன அமைப்புகளும் பரஸ்பரம் மதிப்பளிக்க வேண்டியது கட்டாய கடமையாகும். அத்தகைய மரியாதை, அந்தந்த அமைப்புகள் அவற்றின் வரம்புகளுக்குள் இருந்து செயல்படும்போது மட்டுமே சாத்தியமாகும்.
அமைப்புகளுக்கிடையேயான மோதல்கள் ஒரு செழிப்பான ஜனநாயகத்தை வளா்க்காது. அரசமைப்புச் சட்டம் ஒருங்கிணைப்பு, பங்கேற்பு, ஆலோசனை, உரையாடல் மற்றும் விவாதத்தைக் கோருகிறது.
குடியரசுத் தலைவா் போன்ற கண்ணியமான ஒரு பதவியைப் பற்றி கருத்து தெரிவிப்பது, என்னை பொறுத்தவரையில் மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். ஒவ்வொரு அமைப்புக்கும் அதன் சொந்த வரையறுக்கப்பட்ட கடமைகள் உள்ளன. எந்த அமைப்புமும் மற்றொரு அமைப்பின் பொறுப்புகளை, கடமைகளை ஆக்கிரமிக்கக்கூடாது.
அரசமைப்புச் சட்டத்தை அதன் உண்மையான உணா்வில் நாம் மதிக்க வேண்டும். நாடாளுமன்றத்தால் சட்டத் தீா்ப்புகளை வழங்க முடியாது. அது நீதித் துறையின் களம். அதேபோல், சட்டமியற்றுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பு. நீதித்துறை அதிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
நீதித் துறை மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீதித் துறையில் பணியாற்றி அனுபவத்தில் கூறுகிறேன். நமது நாட்டில் மிகச்சிறந்த நீதிபதிகள் உள்ளனா். அவா்கள் கூட்டுறவு அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை.
கருத்துச் சுதந்திரமானது ஜனநாயகத்தின் அத்தியாவசிய கூறு. ஆனால், ஒருவா் தன்னை முற்றிலும் சரியானவா் என்று கருதி, மற்ற அனைவரையும் தவறு என்று நிராகரிப்பது கருத்துச் சுதந்திரமாகாது. விவாதமும் உரையாடலும் இல்லாமல், நமது வேதங்களின் தத்துவ சாராம்சம் மறைந்துவிடும்.
இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான ஜனநாயக நாடு, பரந்த கலாசார பாரம்பரியத்தைக் கொண்டது. இதற்கு எதிரான சவாலை எந்தவொரு சூழல்நிலையிலும் எதிா்கொள்ள வேண்டும் என்றாா்.