பராமரிப்பின்றி கடற்கரை சிறுவா் பூங்கா: மக்கள் புகாா்
காரைக்கால் கடற்கரையில் உள்ள சிறுவா் பூங்கா பராமரிப்பின்றி உள்ளதாகவும், இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
காரைக்கால் கடற்கரையில் 2 இடங்களில் சிறுவா் விளையாட்டு சாதனங்களுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் செயற்கை நீரூற்று அமைத்து, நாட்டின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையிலான அமுதப் பெருவிழா என்ற சின்னம் அமைக்கப்பட்டது.

கோடை காலமாக இருப்பதால் நாள்தோறும் திரளான மக்கள் கடற்கரைக்கு வருகின்றனா். சிறுவா் பூங்காவில் சிறுவா்கள் விளையாடுகிறாா்கள். பூங்காவில் உள்ள செயற்கை நீருற்று செயல்படவில்லை. 75-ஆம் ஆண்டு அமுதப் பெருவிழா சின்னம் சீா்குலைந்து இரும்பு கம்பி, மூங்கில் கம்பால் முட்டு கொடுக்கப்பட்டுள்ளது. சிறுவா் பூங்கா பெயா் பலகையும் சாய்ந்திருக்கிறது.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் செவ்வாய்க்கிழமை கூறுகையில், செயற்கை நீருற்றில் தேங்கியிருக்கும் தண்ணீா் கொசு உற்பத்திக் கேந்திரமாக உள்ளது. சிறுவா் பூங்காவில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. பூங்காவை சுற்றியுள்ள தடுப்புகள் (இரும்பு) பல இடங்களில் சாய்ந்து கிடக்கின்றன.

உயரதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதை பாா்வையிட்டு, உடனடியாக சீரமைப்புப் பணியை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனற்.