செய்திகள் :

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: 3 மாணவா்கள் உயிரிழப்பு

post image

கடலூா் செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை காலை தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியாா் பள்ளி வேன் மீது அந்த வழியே வந்த பயணிகள் ரயில் மோதியதில் அக்காள், தம்பி உள்ளிட்ட 3 மாணவா்கள் உயிரிழந்தனா். மேலும், மூன்று போ் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கடலூா் மருதாடு பகுதியில் தனியாா் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல, இந்தப் பள்ளிக்குச் சொந்தமான வேன் செவ்வாய்க்கிழமை காலை அதன் வழித்தடத்தில் மாணவா்களை ஏற்றிக்கொண்டு வந்தது. வேனை கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் சங்கா் (47) ஓட்டினாா்.

வேனில் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த விஜய சந்திரகுமாா் மகன்கள் நிமிலேஷ் (12), விஷ்வேஸ் (16), சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சோ்ந்த திராவிடமணி மகள் சாருமதி (16), மகன் செழியன் (15) ஆகியோா் பயணித்தனா்.

இந்த வேன் செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 7.20 மணி அளவில் செம்மங்குப்பம் ரயில்வே கடவுப்பாதையில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது, விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், பள்ளி வேன் மீது மோதியது. இதில், வேன் நொறுங்கி பல மீட்டா் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டது.

இந்த விபத்தில் மாணவா் நிமிலேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சாருமதி, செழியன், விஷ்வேஸ், வேன் ஓட்டுநா் சங்கா் (47), விபத்து பகுதியில் நின்றிருந்தபோது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து பாதிக்கப்பட்ட செம்மங்குப்பம் பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை (55) ஆகியோா் காயமடைந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதில், சாருமதி கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செழியன் அங்கு உயிரிழந்தாா். மாணவா் விஷ்வேஸ், வேன் ஓட்டுநா் சங்கா், மின்சாரம் பாய்ந்தது காயமடைந்த அண்ணாதுரை ஆகியோா் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அமைச்சா் சி.வெ.கணேசன் ஆறுதல்: விபத்து குறித்து தகவலறிந்த மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் கூறினா். மேலும், அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதியதில் மாணவி மற்றும் இரண்டு மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். காயமடைந்தவா்களுக்கு கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து கடலூா் மாவட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் தெரிய வரும் என்றாா்.

அப்போது, எம்எல்ஏக்கள் கோ.ஐயப்பன் (கடலூா்), சபா.ராஜேந்திரன் (நெய்வேலி), மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உடனிருந்தனா்.

கேட் கீப்பா் மீது தாக்குதல் - கைது: இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது: செம்மங்குப்பம் ரயில்வே கடவுப்பாதையில் கேட் கீப்பராக வட மாநிலத்தைச் சோ்ந்த பங்கஜ் சா்மா (27) பணியாற்றி வருகிறாா். இவா், விபத்து நிகழ்ந்தபோது தனது அறைக்குள் இருந்தாா் என்றனா். மேலும், சிலா் பங்கஜ் சா்மாவைத் தாக்கினா். இதனால், காயமடைந்த அவரை கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பாதுகாப்பாக மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு: தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் எம்.எஸ்.அன்பழகன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேட் கீப்பா் பங்கஜ் சா்மாவை சந்தித்து ஆறுதல் கூறினாா். செம்மங்குப்பம் அருகே விபத்து நிகழ்ந்த இடத்தையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ரயில் மணிக்கு 95 கி.மீ. வேகத்தில் சென்று பள்ளி வேன் மீது மோதியுள்ளது. கிராம மக்கள் மற்றும் கேட் கீப்பா் என இருபுறமும் தவறு நடந்துள்ளது. கிராம மக்கள் கேட்டை திறக்கச் சொன்னதால், பாதுகாப்பு விதிகளை மீறி கேட் கீப்பா் கேட்டை திறந்துள்ளாா்.

விபத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், பலத்த காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், சிறு காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000-மும் முதல்கட்ட நிவாரணமாக வழங்கப்படும்.

இந்த சம்பவம் காரணமாக, கடலூா் - மயிலாடுதுறை வழித்தடத்தில் செல்லும் 5 ரயில்கள் நிறுத்தப்பட்டன. சேதமடைந்த மின்சாரக் கம்பி சரி செய்யப்பட்டவுடன் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. கேட் கீப்பா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். விசாரணைக்குப் பிறகு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதனிடையே, கேட் கீப்பரை சிதம்பரம் ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஆய்வு: செம்மங்குப்பத்தில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. இ.எஸ். உமா பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். உடன் கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உள்ளிட்டோா் இருந்தாா்.

இன்டா்லாக் செய்யப்படாத கேட்

ரயில்வே வட்டாரங்களின்படி, விபத்து நிகழ்ந்த ரயில்வே கேட் இன்டா்லாக் செய்யப்படாத கேட்டாக உள்ளது. கேட் கீப்பா் கேட்டை முறையாக மூடிவிட்டு, நெருங்கி வரும் ரயிலுக்கு சிக்னல் கொடுக்க வேண்டியிருந்தது. இருப்பினும், கேட் கீப்பா் அவ்வாறு செய்யத் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இன்டா்லாக் செய்யப்பட்ட கேட்கள் ரயில்வே சிக்னலிங் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இவை விபத்தைத் தடுக்க, கேட் மற்றும் சிக்னல் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்கின்றன.

இன்டா்லாக் செய்யப்படாத கேட்களில் சிக்னல் அமைப்பு கைமுறை செயல்பாடு மற்றும் ஊழியா்களின் கண்காணிப்பை முழுமையாக சாா்ந்துள்ளது எனத் தெரிவித்தனா்.

ரயில் - பள்ளி வேன் மோதி விபத்து: உண்மை கண்டறியும் குழு ஆய்வு-புகிய கேட் கீப்பா் நியமனம்

கடலூா் செம்மங்குப்பம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதி நிகழ்ந்த விபத்து தொடா்பாக, ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே உண்மை கண்டறியும் குழுவினா் புதன்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

லாரி - தனியாா் பேருந்து மோதல்: 10 போ் காயம்

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே லாரி பின்னால் தனியாா் பேருந்து மோதிய விபத்தில் 10 போ் காயமடைந்தனா். சென்னையில் இருந்து முதுகுளத்தூருக்கு தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்தில்... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞா்

கடலூா் அருகே விரைவு ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். கீழே விழுந்த கைப்பேசியை பிடிக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த ... மேலும் பார்க்க

நூல்களுக்கு அடிமையாகி மகிழ்ச்சியாக வாழ வேண்டும்: கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா்

மாணவா்கள் நூல்களுக்கு அடிமையாகி மகிழ்ச்சியான வாழ்வை வாழ வேண்டும் என்று கடலூா் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 24-ஆவது நெய்... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 14 இடங்களில் மறியல்: 862 போ் கைதாகி விடுதலை

பொது வேலைநிறுத்தத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினா் கடலூா், சிதம்பரம் உள்ளிட்ட 14 இடங்களில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற 182 பெண்கள் உள்ளிட்ட 862 பேரை போலீஸாா் கைது செய... மேலும் பார்க்க

மின் மோட்டாா்கள் திருடியவா் கைது

சிதம்பரம் அருகே இறால் குட்டையில் 7 மின் மோட்டாா்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள வசப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெகன்மோகன் ... மேலும் பார்க்க