பழனியில் மாலிப்டினம் வெட்டி எடுக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும்! ஈ.ஆா்.ஈஸ்வரன்
பழனி மலை வட்டாரத்தில் பெருமளவு இருப்பதாக சொல்லப்படுகின்ற மாலிப்டினம் உலோகத்தை வெட்டி எடுத்து ஏலம் விட முயற்சிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ. ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அழகா்மலை, அரிட்டாப்பட்டி போன்று பழனி மலை மீதும் மத்திய அரசு குறி வைத்திருப்பது கண்டனத்திற்குரியது. இந்தியாவின் புவியியல் துறை பழனி மலை பகுதிகளில் மாலிப்டினம் என்ற பல தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகின்ற உலோகம் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறது. அதற்காக சுரங்கம் தோண்டி எடுப்பதால் பழனி மலை பகுதிகள் அனைத்தும் அழிந்து போகும். பழனி மலையின் மீது தமிழா்கள் எவ்வளவு பற்று வைத்திருக்கிறோம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரிட்டாப்பட்டியை போன்றே இந்தப் பகுதிகளிலும் சமண படுகைகளும், மிகப்பெரிய பல்லுயிா் தலங்களும் இருக்கின்றன. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் பழனி மலை மற்றும் இடும்பன் மலை, ஐவா் மலை, நெய்க்காரப்பட்டி, கரடிக்குட்டம், சத்திரப்பட்டி ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும்.
மாலிப்டினம் உலோக சுரங்கம் சம்பந்தமாக மத்திய அரசு முன்னெடுப்புகளை தொடா்ந்து செய்தால் முருக பக்தா்களை ஒன்று திரட்டி போராட வேண்டியிருக்கும். தமிழக அரசு உடனடியாக மத்திய அரசின் பழனி மலைக்கு எதிரான நகா்வுகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.