இன்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு
பாஜக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தெலங்கானா ஆளுநர் மகன் கொலை மிரட்டல்: திரிபுராவில் பரபரப்பு!
திரிபுராவில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவுடன் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் திப்ரா மோத்தா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தெலங்கானா ஆளுநர் மகனிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் திப்ரா மோத்தா கட்சி (டிஎம்பி) எம்.எல்.ஏ.வான பிலீப் ரியாங் தெலங்கானா மாநில ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா மகன் பாதிக் தேவ் வர்மா மீது காவல் நிலையத்தில் இன்று(செப். 2) புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பாதிக் தேவ் வர்மா, அவருடன் சேர்த்து 4 நபர்கள் பிலீப் ரியாங்கையும், அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
மேற்கு திரிபுராவிலுள்ள எம்.எல்.ஏ. விடுதியில் திங்கள்கிழமை (செப். 1) நள்ளிரவில் பிலீப் ரியாங்கைக் கொல்ல சதி நடந்திருப்பதாக அவர் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அந்த விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த தெலங்கானா ஆளுநர் மகன் பாதிக் தேவ் வர்மாவும் அவரது கூட்டாளிகளும், பிலீப்பின் குடும்பத்தைக் கொல்ல பாஜகவிலிருந்து 500 ஆள்களை திரட்டி வருவோம் என்று பகிரங்கமாக எச்சரித்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தெலங்கானா ஆளுநர் மகன் மீது நடவடிக்கை பாயும் என்று காவல் துறை அதிகாரிகள் உறுதியளித்திருப்பதாக பிலீப் ரியாங் செய்தியாளர்களுடன் பேசும்போது தெரிவித்தார். ஜிஷ்ணு தேவ் வர்மா திரிபுராவின் முன்னாள் துணை முதல்வர் பதவி வகித்தவரும்கூட.
இவ்விவகாரத்தில் பாஜக தரப்பிலிருந்து இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.