பிகாரில் ரூ.40 லட்சத்தில் மணிக்கூண்டு! திறந்த மறுநாளே நின்றுபோன கடிகாரம்!
பிகார் மாநிலத்தில், ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட மணிக்கூண்டு நேற்று திறக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே அதிலிருந்த கடிகாரம் நின்றுபோன சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
பிகார் ஷரிஃப் என்ற பகுதியில் பொலிவுறும் நகரம் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் செலவில் உயரமான மணிக்கூண்டு கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.
பிகார் முதல்வரின் பிரகதி பயணத்துக்காக, மிக அவசர அவசரமாக இந்த மணிக்கூண்டு திறந்துவைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த மணிக்கூண்டுக்குள் திருடர்கள் சிலர் ஏறி, அதிலிருந்த செப்புக் கம்பிகளை திருடிச் சென்றிருக்கிறார்கள். இதனால், கடிகாரம் நின்றுபோனது மட்டுமல்ல, மணிக்கூண்டே பொலிவிழந்தும் போயிருக்கிறது.
இன்று காலை அவ்வழியாக வந்த மக்கள், மணிக்கூண்டைப் பார்த்தபோது, அதில் இருந்த கடிகாரம் ஓடாமல் நின்றிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நேற்று திறக்கப்பட்ட நிலையில், இன்றே கடிகாரம் நின்றுவிட்டதே என்று வானத்தைப் பார்த்து கையை மட்டும் அசைத்தபடி என்ன செய்வது என வேதனையோடு கடந்துசென்றுவிட்டனர்.
இதில், அவசர அவசரமாக தயார் செய்தபோது, உரிய முறையில் வர்ணம் பூசாமல் ஏதோ விலை மலிவான வெள்ளையை அடித்திருப்பார்கள் போல. அதனால் அது நிறம் மங்கி பல ஆண்டுகள் ஆன மணிக்கூண்டு போல ஆகிவிட்டது.
இந்த விடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட நிலையில், ஒருவர், 24 மணி நேரமும் ஓட வேண்டிய கடிகாரம் 24 மணி நேரத்துக்குள் நின்றுவிட்டது. இந்த மிக அழகிய கட்டட கலை அமைப்பை ஏற்படுத்த எவ்வளவு செலவாகியிருக்கும் என சிந்தியுங்கள்... வெறும் ரூ.40 லட்சம்தான் என்று கருத்திட்டிருக்கிறார்கள்.
இதுபோல எள்ளிநகையாடும் ஏராளமான கருத்துகள் குவிந்து வருகிறது.
இதையும் படிக்க.. ஆவடி காவல் ஆணையர் வாகனம் விபத்து: போக்குவரத்து புலனாய்வு காவல்துறை விசாரணை