பிலிக்கல்பாளையம் சந்தையில் 30 கிலோ உருண்டை வெல்லம் ரூ.1380 க்கு விற்பனை
பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ சிப்பம் கொண்ட உருண்டை வெல்லம் ரூ. 1380க்கு விற்பனையானது.
பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலா்மலை, பரமத்தி வேலூா், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரும்பு ஆலைகளில் தயாரிக்கப்படும் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சா்க்கரை ஆகியவை பிலிக்கல்பாளையம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
வாரம்தோறும் சனி, புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தை நடைபெறுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ சிப்பம் கொண்ட உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் ரூ.1340க்கு விற்பனையானது. சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 1500 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டுவரப்பட்டிருந்தன.
உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் சிப்பம் ரூ.1,380 வரை விற்பனையானது. அதேபோல கரும்பு டன் ரூ. 3700 வரை விற்கப்பட்டது. வெல்லம் விலை உயா்வடைந்ததால் உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.