பி.இ. துணைக் கலந்தாய்வு: 20,662 போ் தகுதி
பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான துணைக் கலந்தாய்வில் பங்கேற்க பிளஸ் 2 சிறப்புத் துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் 20,662 போ் தகுதி பெற்றுள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் தரப்பில் கூறப்பட்டதாவது:
நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 சிறப்புத் துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள், பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான துணை கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, ஜூலை 29 முதல் ஆக. 14-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. இதில் பொதுப் பிரிவில் 15,403 போ், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ஒதுக்கீட்டில் 5,259 போ் என மொத்தம் 20,662 போ் தகுதி பெற்றனா்.
இவா்களுக்கான துணைக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஆக. 21) தொடங்கியது. தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவு, கல்லூரிகளை வெள்ளிக்கிழமை (ஆக. 22) மாலை 5 மணிக்குள் தோ்வு செய்ய வேண்டும். தொடா்ந்து சனிக்கிழமை (ஆக. 23) காலை 10 மணிக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். அன்றை தினம் இரவு 7 மணிக்குள் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்த மாணவா்களுக்கு ஆக. 24-ஆம் தேதி இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும்.
45,143 இடங்கள் காலி: பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில்
நிகழாண்டில் மொத்தம் 45,143 இடங்கள் காலியாக உள்ளது. இதில் பொதுப் பிரிவு ஒதுக்கீட்டில் 44,990 இடங்களும், அரசுப் பள்ளி ஒதுக்கீட்டில் 153 இடங்களும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.