பீகார்: பாம்பு கடித்த பெண்ணை மீண்டும் பாம்பு அருகே படுக்க வைக்கும் கிராமவாசிகள்; பின்னணி என்ன?
பீகாரின் சீதாமர்ஹி மாவட்டத்தில் பாம்பு கடித்ததாகக் கூறப்படும் ஒரு பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மீண்டும் பாம்பை அருகில் வைத்து அந்தப் பெண்ணைப் படுக்க வைத்திருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து ஷிவ்ராஜ் தேவ் என்ற பயனர் வெளியிட்டுள்ள பதிவின்படி, ”பீகாரில் ஒரு பெண்ணை பாம்பு கடித்துவிட்டது. அவரை மருத்துவமனை அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, அங்குச் சடங்கு செய்கின்றனர்.
ஒருவர் குச்சியின் உதவியுடன் பாம்பை மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணிற்கு அருகில் வர வைக்க முயல்கிறார். அவ்வாறு பாம்பு கடித்து விஷத்தை உறிஞ்சு என்று அதனைக் கட்டாயப்படுத்துகின்றனர். ஆனால் நாகப்பாம்பு ஒவ்வொரு முறையும் அந்தப் பெண்ணைக் கடிக்கிறது. கிராமப்புறங்களில் அரசாங்கம் பெரிய அளவிலான விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த வேண்டும்.
பாம்புக்கடிக்கு ஒரே சிகிச்சை பேயோட்டுதல் அல்ல விஷ எதிர்ப்பு மருந்து என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்” என்று அவர் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதே போன்ற சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் கட்னி மாவட்டத்திலும் நடந்துள்ளது.
வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு இளைஞரை பாம்பு கடித்த போது மருத்துவச் சிகிச்சைக்காக அவரை அழைத்துச் செல்வதற்குப் பதில் மந்திரவாதி இடம் அழைத்துச் சென்றனர். அதனால் நேர்ந்த ஒரு மணி நேரக் காத்திருப்பால் அந்த இளைஞர் இறந்திருக்கிறார். இது போன்ற சம்பவங்கள் நிகழும் போது பாம்புக் கடி குறித்த விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை என்று உணரப்படுகிறது.
ये रहा विडियो pic.twitter.com/ZbHLNkLQX5
— प्रभाकर यादव (@yadavggoollsp) August 26, 2025