பெகாசஸ் வைத்திருக்கும் அரசு பயங்கரவாதிகளைப் பிடிக்காதது ஏன்? காங்கிரஸ் எம்பி
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் எப்படி ஊடுருவினார்கள் என்று காங்கிரஸ் மக்களவை குழு துணைத் தலைவர் கௌரவ் கோகோய் கேள்வி எழுப்பியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்று வருகின்றது.
மத்திய அரசு தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் விளக்கம் அளித்து விவாதத்தை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, காங்கிரஸ் சார்பில் கெளரவ் கோகோய் விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது:
ஏற்கெனவே, மத்திய அரசு தரப்பில் வெளியிட்ட அனைத்தையும் பாதுகாப்பு அமைச்சர் மீண்டும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்திய மக்கள் உண்மையிலேயே தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால், 5 பயங்கரவாதிகள் நாட்டுக்குள் எப்படி ஊடுருவினார்கள்? என்பதுதான்.
பஹல்காம் தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது.
100 நாள்கள் ஆகியும் ட்ரோன்கள், செயற்கைக்கோள்கள், பெகாசஸ் உள்ளிட்டவை வைத்திருக்கும் அரசால் 5 பயங்கரவாதிகளை இன்னும் பிடிக்க முடியவில்லை.
வர்த்தகத்தை முன்வைத்து இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் 26 முறை கூறியுள்ளார். இதன் பின்னணியில் உள்ள உண்மையை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும்.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறப்பட்டாலும், பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம், நிதி உதவி செய்வதை இந்திய அரசால் தடுக்க முடியவில்லையா?
சில ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தால், அது இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு என நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.