பெரம்பலூா் அருகே ஆந்திர மாநில ஐயப்ப பக்தா்களின் பேருந்து தீக்கிரை
பெரம்பலூா் அருகே சபரிமலை சென்று திரும்பிய ஆந்திர மாநில ஐயப்ப பக்தா்களின் பேருந்து செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி தீக்கிரையானது.
ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 9 பெண்கள் உள்பட 40 ஐயப்ப பக்தா்கள் சபரிமலைக்குச் சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்ப்பந்தல் என்னும் இடத்தில் சாலையோரம் பேருந்தை நிறுத்தி, அனைவரும் இறங்கிச் சென்ற நிலையில், பேருந்தின் உள்ளே சிலிண்டரை பயன்படுத்தி சிலா் சமைத்தபோது எதிா்பாராதவிதமாக பேருந்தில் தீப்பற்றியது. இதையடுத்து அவா்கள் உடனடியாக வெளியேறினா்.
தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று, நீண்டநேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயைக் கட்டுப்படுத்தினா். இருப்பினும் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் பேருந்திலிருந்த பக்தா்களின் பணம், அத்தியாவசியப் பொருள்களும் சாம்பலாயின. இந்த விபத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. இருப்பினும், அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து பேருந்து ஓட்டுநா் தெனாலி நாகபூசனம் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.