பெரம்பலூா்: 1.71 லட்சம் குழந்தைகள், மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
பெரம்பலூா் மாவட்டத்தில் 1.71 லட்சம் குழந்தைகள் மற்றும் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில், குடற்புழு நீக்க மாத்திரையின் பயன்கள், பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் பேசியது: மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாமில் 1 முதல் 19 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும், 20 முதல் 30 வயது வரையிலான பெண்களுக்கும் (கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் தவிர) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. 1 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 6 முதல் 19 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது.
பள்ளிச் செல்லாத குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியா்களும், அங்கன்வாடி பணியாளா்களும் வீடு, வீடாகச் சென்று குடற்புழு மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விடுபட்ட குழந்தைகளுக்கு ஆக. 18 ஆம் தேதி வழங்கப்படும். இம் மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் களையப்பட்டு, குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் மாணவ, மாணவிகளின் கல்வித்திறன் மேம்படும்.
தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தின் மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 1,71,590 குழந்தைகள் மற்றும் மாணவா்களும், 45,034 பெண்களும் பயன்பெறுவாா்கள் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலா் கீதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) செல்வகுமாா், தேசிய சுகாதார இயக்கத் திட்ட இயக்குநா் விவேகானந்தன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.