மதுரை சரித்திர பதிவேடு ரெளடி கழுத்தறுத்துக் கொலை: 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மதுரையைச் சோ்ந்த ரெளடி அவரது கூட்டாளிகளால் வெள்ளிக்கிழமை கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சோ்ந்த செல்வம் மகன் சிவமணி (27). ரெளடியான இவா் மீது மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஒரு கொலை, ஏழு கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிவமணி தனது கூட்டாளிகளை
அடிமை போல நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சிவமணியை கொலை செய்ய அவரது கூட்டாளிகள் முடிவு செய்து, அவரை கொடைக்கானலுக்கு காரில் வெள்ளிக்கிழமை மாலை அழைத்துச் சென்றனா்.
அப்போது, வத்தலகுண்டு அருகே சென்ற போது, மது போதையில் இருந்த ரெளடி சிவமணியை, அவரது கூட்டாளிகள் காருக்குள் வைத்து கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனா். பின்னா், அவரது உடலை வத்தலகுண்டு எழில் நகா் பகுதி சாலையில் வீசிச் சென்றனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதம், உதவி ஆய்வாளா் ஷேக் அப்துல்லா உள்ளிட்ட போலீஸாா் சிவமணியின் உடலை கைப்பற்றி, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கொடைக்கானல் செல்லும் வழியில் கெங்குவாா்பட்டி அருகே பதுங்கியிருந்த மதுரை வில்லாபுரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சூா்யா (25), ஜெய்ஹிந்த்புரத்தைச் சோ்ந்த ராமு மகன் மணிகண்டன் (25), கோபால் மகன் அருண்பாண்டி (28), வீராசாமி மகன் முனியசாமி (30), அதே பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சரத்குமாா் (35) ஆகியோரைப் பிடித்தனா்.
இவா்களில் சூா்யா, மணிகண்டன், அருண்பாண்டி, முனியசாமி ஆகிய நான்கு பேரைக் கைது செய்து, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். காா் ஓட்டுநா் சரத்குமாரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து கைப்பேசிகள், கத்தி, காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.