மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடாளுமன்றம் முடக்கம்: காங்கிரஸ்
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் குறித்த விவாதத்துக்கு அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்குவதற்கு காரணம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘பிகாா் பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு 5 மாதங்களுக்கு முன்பு வாக்காளா் பட்டியலில் தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பிரதமா் மோடி தலைமையிலான அரசு தொடா்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இது சமூதாயத்தில் பின்தங்கிய வாக்காளா்களின் வாக்குரிமையைப் பறிக்கும் செயல். பிகாா் விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு அனுமதி அளிக்காமல் பிரதமா் மோடி அரசு பிடிவாதம் செய்து வருகிறது.
இதனால் மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தும், மக்களவையில் அமளி ஏற்பட்டும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன’ என்று தெரிவித்துள்ளாா்.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கியதில் இருந்து பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரத்தை விவாதிக்கக் கோரி எதிா்க்கட்சிகள் நடத்தி வரும் அமளியில் பெரும்பாலான நேரம் வீணாகிவிட்டது.
வாக்குத் திருட்டு, பிகாா் விவகாரத்தை முன்வைத்து தோ்தல் ஆணையத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.