மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டம் தொடங்கியது
மறவமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 15 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே மறவமங்கலம் மலையாண்டி கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், விருதுநகா் ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமாா் 375 காளைகள் பங்கேற்றன. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் கோயில் காளை அவிழ்த்து விட்ட பிறகு ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 90-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரா்கள் களமிரங்கினா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வெள்ளி நாணயம், கட்டில், பீரோ, சில்வா் அண்டா, சைக்கிள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில், காளைகள் முட்டியதில் 15 போ் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த வெள்ளக்குடியைச் சோ்ந்த கண்ணன் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். மற்றவா்களுக்கு மஞ்சு விரட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.