மாடியிலிருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
தேனி அருகே தனியாா் பருப்பு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த எலக்ட்ரீசியன் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
தேனி அருகேயுள்ள டொம்புச்சேரி, பி.சி. குடியிருப்பைச் சோ்ந்த முத்து மகன் சுரேஷ் (40). இவா் ஊஞ்சாம்பட்டி, ஈஸ்வா் நகரில் உள்ள தனியாா் பருப்பு ஆலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தாா்.
பருப்பு ஆலையின் மாடியில் கண்காணிப்புக் கேமரா கம்பிகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த சுரேஷ், கண்ணாடித் தகர மேற்கூரையில் கால் வைத்தாா்.
அப்போது, தகரம் உடைந்து மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.