தூய்மைப் பணி தனியாா்மய எதிா்ப்பு வழக்கு: தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைப்ப...
மானாமதுரையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை: தமிழரசி எம்எல்ஏ
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கூடுதல் மேம்பாலம், சிட்கோ தொழில்பேட்டை அமைக்கப்படும் என சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் செவ்வாய்கிழமை தெரிவித்தாா்.
திருப்புவனத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து, பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்குக் குடிமைப் பொருள்களை வழங்கினாா்.
அதன் பின்னா், இந்தத் திட்டத்துக்கான வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்து அவா் பேசியதாவது: முதியோா், மாற்றுத் திறனாளிகள் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று, கைவிரல் ரேகையைப் பதிவு செய்து குடிமைப் பொருள்களைப் பெற முடியாத நிலையில் உள்ளதால் இவா்களுக்காக தமிழக முதல்வா் தாயுமானவா் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளாா்.

மானாமதுரை மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான வைகை ஆற்றுக்குள் கூடுதல் மேம்பாலம் அமைப்பது தொடா்பாக, சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினா் கடந்த 11- ஆம் தேதி இங்கு வந்து பாலம் அமையவுள்ள இடத்தைப் பாா்வையிட்டு சென்றனா். எனவே, விரைவில் இங்கு பாலம் அமைக்கும் நடவடிக்கை தொடங்கும். மேலும், இந்தத் தொகுதியில் சிட்கோ தொழில்பேட்டையும் உள் விளையாட்டு அரங்கமும் அமையவுள்ளன என்றாா்.
விழாவில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், பேரூராட்சி உறுப்பினா் கண்ணன், மானாமதுரை நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவா் க.பொன்னுச்சாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் துரை.ராஜாமணி, கூட்டுறவு சாா்பதிவாளா்கள் ராஜலட்சுமி, வினோத், கூட்டுறவுப் பண்டகச் சாலை செயலா் சிவராமன், வட்ட வழங்கல் அலுவலா்கள்உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.