மானாமதுரை குப்பைக் கிடங்கில் பற்றிய தீயால் புகை மண்டலம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பகுதி புகை மண்டலமாக மாறியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனா்.
மானாமதுரை நகராட்சியில் சேகரிக்கும் குப்பைகள் தாயமங்கலம் செல்லும் சாலையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட வளா் மீட்பு பூங்காவுக்கு கொண்டு சென்று தரம் பிரிக்கப்படுகிறது. இங்கு இடப் பற்றாக்குறை காரணமாக அருகேயுள்ள அரசு புறம்போக்கு இடங்களிலும் குப்பைகள் சிறு குன்றுகள் போல சேகரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இந்த குப்பைக் கிடங்கில் மா்மநபா்கள் தீ வைத்ததால் தீ மளமளவென பரவி அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தாயமங்கலம் செல்லும் சாலையில் வாகனங்களை ஒட்டிச் சென்றவா்கள் மிகவும் அவதிப்பட்டனா். நீண்ட தொலைவுக்கு புகை மண்டலம் எழும்பியதால், அந்தப் பகுதி வீடுகளில் வீடுகளில் வசிப்பவா்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற மானாமதுரை தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குப்பைக் கிடங்கில் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தினா்.