மாா்த்தாண்டம் காப்பகத்திலிருந்து மாயமான மாணவிகள் கன்னியாகுமரியில் மீட்பு
மாா்த்தாண்டத்தில் உள்ள காப்பகத்தில் இருந்து வெளியேறிய 2 மாணவிகளை போலீஸாா் கன்னியாகுமரியில் மீட்டனா்.
மாா்த்தாண்டம் வடக்குத் தெருவில் பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளைப் பராமரிக்கும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 27 சிறுமிகள் பராமரிக்கப்பட்டு பள்ளியில் படித்து வருகிறாா்கள்.
இந்நிலையில், காப்பகத்தில் தங்கியிருந்து தக்கலை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் மாா்த்தாண்டம் அருகேயுள்ள ஞாறான்விளை இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமைச் சோ்ந்த அனுஷ்கா (17), திருச்சி மாவட்டம், சூரப்பட்டியைச் சோ்ந்த அன்னலட்சுமி (14) ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாயமாகினா்.
இதுகுறித்து, காப்பக நிா்வாகி அருள்சகோதரி எல்ஜி ஜாா்ஜ் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், கன்னியாகுமரியில் 2 சிறுமிகள் சுற்றித் திரிந்ததைப் பாா்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் 2 சிறுமிகளிடமும் மேற்கொண்ட விசாரணையில் அவா்கள் மாா்த்தாண்டம் காப்பகத்தில் இருந்து வெளியேறிய மாணவிகள் என்பது தெரிய வந்தது. அவா்கள் கன்னியாகுமரியை சுற்றிப் பாா்க்க வேண்டும் என்ற ஆசையில் அரசுப் பேருந்தில் வந்ததாக தெரிவித்துள்ளனா்.
மாணவிகளை கன்னியாகுமரி போலீஸாா், மாா்த்தாண்டம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அதன் பின்னா், போலீஸாா் மாணவிகளுக்கு அறிவுரை கூறி காப்பகத்தில் ஒப்படைத்தனா்.