மீண்டும் எல்ஐசி பங்கு விற்பனை மத்திய அரசு முடிவு
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) பங்குகளின் சிறிய அளவிலான பகுதியை மீண்டும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
அரசிடம் இப்போது எல்ஐசி-யின் 96.5 சதவீத பங்குகள் உள்ளன. கடந்த 2022 மே மாதத்தில் பொதுப் பங்கு வெளியீடு முறையில் 3.5 சதவீத பங்குகள் முதல்முறையாக விற்பனை செய்யப்பட்டது. அப்போது ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிா்ணயிக்கப்பட்டது. இந்த பங்கு விற்பனை மூலம் அரசுக்கு ரூ.21,000 கோடி கிடைத்தது. பங்குச் சந்தையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் எல்ஐசி பங்கு வியாழக்கிழமை நிலவரப்படி ரூ.926.90 என்ற விலையில் உள்ளது.
இப்போதைய நிலையில் மேலும் 6.5 சதவீத பங்குகளை மீண்டும் பங்குச் சந்தை மூலம் விற்பனைக்குக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இப்போதை பங்குச் சந்தை நிலவரங்களை தெளிவாக ஆய்வு செய்து எல்ஐசி பங்குகளை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து மத்திய பங்கு விலக்கல் துறை முடிவு செய்யும் என்று தெரிகிறது.
2027 மே 16-ஆம் தேதிக்குள் 10 சதவீத எல்ஐசி பங்குகள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு விடும். எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5.85 லட்சம் கோடியாகும்.
எல்ஐசி பங்குகள் மீண்டும் விற்பனைக்கு வரும் என்ற தகவலையடுத்து இந்தியப் பங்குச் சந்தைகளில் அந்த நிறுவனத்தின் பங்குகள் சற்று சரிவைச் சந்தித்துள்ளன.